Thursday, September 21, 2023

 

உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க.

தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இப்ப ஒரு சின்ன அறிமுகம் தரேன் தெரிஞ்சுக்கோங்க.
சிவயோகி ந்னு ஒரு யோகி, அகத்தியரைப் பார்க்கப்போயிட்டிருந்தாராம். வழியில, ஒரு ஊர்ல மாடு, ஆடுகள் எல்லாம் அழுகறதைப் பார்த்தாரு. :ஏன் அழுவுறீங்கப்பா” ன்னு அதுக கிட்ட கேட்டா, அதுக, அங்க ஒரு ஆள் படுத்துக்கிடந்ததக் காட்டினதுகளாம். மாடுகளை மேய்ச்சிட்டு வந்த இடையன் செத்துக் கிடந்தாரு. இவருக்கு, ரொம்ப கஷ்டமாப் போச்சு. சரி, பாவம் மாடுக, கன்னுகுட்டிக, ஆடுகள், இதுகளுக்காக ஏதாவது செய்யணும்னு “நாம யோகத்தால, இவன் சரீரத்துக்குள்ள கூடு விட்டு கூடு பாய்ந்து, இவனைப்போல இன்னிக்கு ஒரு நாளைக்கு சமாளிப்போம்” னு, தன் உடலை ஒரு புதர்ல மறைச்சு வச்சுட்டு, அந்த இடையன் உடல்ல புகுந்துகிட்டாராம். அவன் பேர் மூலன்.
வேலை முடிஞ்சு மாடுகள் எல்லாம், அதனது வீட்டுக்கு போனதும், போய் தன் உடல்ல புகுந்துக்கலாம்னு பார்த்தா, அதை ஏதோ ஒரு மிருகம் தின்னுபுட்டு போயிடுச்சாம். அப்புறம் வேற வழியில்லாம அந்த உடம்போடயே இருந்துட்டாரு. யோக நிலையிலயே இருந்தாருன்னு புரிஞ்சுகிட்டு, அவர அந்த ஊர்காரங்களும் தொந்தரவு பண்ணல. அந்த இடையன் மனைவி பஞ்சாயத்துல கேட்டதுக்கும் அவங்க விட்டுடச் சொல்லிட்டாங்க.
அப்புறம் அவரு திருவாவடுதுறை போய் தவம் இருந்து …..
இங்கதான் விஷயமே! ஆண்டுக்கு ஒரு பாட்டுன்னு மூவாயிரம் பாட்டு எழுதினாருன்னு சேக்கிழாரும் சொல்றாரு, எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ரொம்ப ஸ்னஹ்தேகம். அதெப்படி, முன்னாடி எழுதின பாட்டுமே மறந்துடுமே வருஷம் ஒரு பாட்டு எழுதினா? யாரு எழுதிப்பா? சொல்லிட்டு சமாதிக்கு போயிட்டா, மூவாயிரம் வருஷம் எப்படி தொடர்ச்சி இருக்கும்னெல்லாம் குழப்பமா இருந்துது.
இப்பதன அதுக்கு விடை கிடைச்சது. கிடைச்சதும் உங்களுக்கும் சொல்ல வந்துட்டேன்.
அதாவது, அவரு யோகி இல்ல, அவங்களுக்கு ஒரு மூச்சுங்கறது ஒரு நாளாம். உள்ள இழுக்கற மூச்சு இரவாம்; வெளிய விடற மூச்சு பகலாம். முப்பது மூச்சு ஒரு மாசம், 360 மூச்சு ஒரு வருஷம். ஒரு மூச்சுக்கு நான்கு வினாடிகள். இதுபடி பார்த்தால், 360 மூச்சுக்கு 24 நிமிடங்கள் ஆகும். ஆழ்ந்த த்யானத்தில் 24 நிமிடங்க்ள் இருந்து பிறகு விழித்து, த்யானத்தில் உணர்ந்ததை ஒரு பாடலாப் பாடுவாராம்.
இப்படித்தான் 3000 பாடல்களும் பாடினாராம்.
என் சந்தேகம் தீர்ந்தது. உங்களுக்கும் சிலபேருக்கு இப்படி சந்தேகம் இருந்திருக்கும் இல்ல? இப்ப தீர்ந்திருக்கும்.
வாசித்ததற்கு நன்றி
உஷா சங்கரநாராயணன்.

 

ஒரு கதை சொல்றேன்.

ஒருமுறை கிருஷ்ணர் ரொம்ப சோகமா நின்னுட்டு இருந்தார். அந்த வழியா வந்த நாரதர் "என்ன கிருஷ்ணா ரொம்ப வருத்தமா இருக்கீங்க? அப்படின்னு கேட்டார்.
அதுக்கு கிருஷ்ணன் சொன்னாரு "என்னமோ போ எனக்கு ஏன்தான் இவ்வளவு சோதனையோ" அப்படின்னு சொன்னார். "அட, உங்களுக்கு சோதனையா? என்ன சொல்றீங்க? மனுஷங்களுக்கு சோதனை வந்தா உங்க கிட்ட வரலாம். உங்களுக்கே சோதனைன்னா யார்கிட்ட போறது கிருஷ்ணா" அப்படின்னு கேட்டார்.
"ஆமா நாரதா, உனக்கு சத்ரஜித் தெரியுமா?" அப்படின்னு கிருஷ்ணர் கேட்டார். நாரதர் சொன்னாரு, "தெரியுமே நீங்க கூட உங்களுக்கு கிடைத்த ஸ்யமந்தக மணியை அவர்கிட்ட கொடுத்தீங்களே! அவரும் அதை உக்ரசேன மகாராஜா கிட்ட கொடுக்காம தானே வச்சுட்டாரு. அவர் தானே?" அப்படின்னு சொன்னாரு நாரதர்.
"அவர் என்ன பண்ணிட்டாரு அந்த மணியை கொண்டு போயி அவரோட தம்பி பிரசேனண்ட கொடுத்தார். இந்த பிரசேனன் என்ன பண்ணான், அதை எடுத்துக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட போனான். போனவன் வரவே இல்லை. இங்கே சத்ரஜித் அந்த மணிக்காக நான் தான் பிரசேனனைக் கொன்னுட்டேன் அப்படின்னு ஊரு பூரா சொல்லிக்கிட்டு திரிகிறான். என்னடா இது பழியா வருது இதை எப்படி நம்ம நீக்கறதுன்னு ப்ரசேனனைத் தேடிக்கிட்டு காட்டுக்கு போனேன்." ந்னு க்ருஷ்ணர் சொன்னாரு.
"ஹ்ம்ம்ம் அப்புறம்" ந்னு நாரதரும் ஜோரா கதைக் கேக்குறார்.
"காட்டுல போய் பார்த்தா அவன் செத்து கிடக்கிறான். சரி மணி எங்கயாவது பக்கத்துல வச்சிருக்கானான்னு பார்த்தா அதையும் காணோம். அந்த இடத்துல ஒரு சிங்கத்தோட கால் தடம் பார்த்தேன். சரின்னு அந்த தடத்தோட கூட போய் பார்த்தா ஒரு சிங்கம் செத்துக் கிடந்தது. அந்த சிங்கத்துக்கு பக்கத்துல கரடியோட கால் தடம் இருக்கு. சரின்னு அதையும் தொடர்ந்து போய் பார்த்தேன். அங்க ஒரு பெண் கரடி என்ன பார்த்து 'ஓ' ந்னு கத்துறா. அதை பார்த்து ஒரு ஆண் கரடி ஓடி வந்துருச்சு." ந்னு க்ருஷ்ணர் சொன்னார்.
"அச்சச்சோ அது என்ன பண்ணினது க்ருஷ்ணா? ந்னு நாரதர் ஆர்வமா கேட்டாரு.
"அந்த கரடி ஜாம்பவான் தான். சண்டைக்கு வந்துட்டாரு" ந்னார் க்ருஷ்ணர்.
"ஓ ராம அவதாரத்துல வந்த ஜாம்பவானா?" ந்னாரு நாரதர்.
"ஆமா அப்பவே யுத்தம் முடிஞ்ச உடனே எல்லாரும் வரம் கேட்டாங்க. கொடுத்துட்டே வந்தேன். ஜாம்பவான் என்னோட சண்டை போடணும் அப்படின்னு வரம் கேட்டார். அது இப்ப கிடையாது, வேற ஒரு சமயத்துல. அப்படின்னு சொல்லிட்டேன். இப்ப அவரு சண்டைக்கு கூப்பிட்ட உடனே, சரி அவர் கேட்ட வரத்தை கொடுப்போம் அப்படின்னு 28 நாள் சண்டை போட்டோம். மல்யுத்தம். சோறு, தண்ணி கிடையாது. ஒரு வழியா அவர் புரிந்து கொண்டார். ராமாஅ வந்தவன் தான் கிருஷ்ணன் அப்படின்னு. அதுக்கப்புறம் கால்ல விழுந்தார். மன்னிப்பு கேட்டாரு. மணியை கொடுத்தார். அவர் பொண்ணையும் கல்யாணம் பண்ணி கொடுத்தாரு.
சரின்னு மணியை எடுத்துட்டு வந்து சத்திரஜித் கிட்ட கொடுத்துட்டு, உன் தம்பியை நான் கொல்லல அப்படின்னு சொல்லிட்டேன். அவனும் அந்த மணியை கொண்டு போயி ராஜா கிட்ட கொடுத்துட்டான்."
"எல்லாம் சுபம் தானே க்ருஷ்ணா? அப்புறம் என்ன யோசனை?" ந்னு நாரதர் கேட்டாரா,
"ஆனா செய்யாத தப்புக்கு பழி வந்ததே அது இந்த சதுர்த்தில நான் பார்த்த நாலாம் பிறையாலதான் நாரதா" ந்னார் க்ருஷ்ணர்.
"ஆமாம் க்ருஷ்ணா. விநாயகரை கேலி பண்ணி சிரிச்சதால சந்த்ரனை சபிச்சாரில்ல சதுர்த்தி அன்னிக்கு? ஞாபகம் வரது எனக்கும். அப்போ அவர் சொன்னார் யாராவது நாலாம் பிறையில சந்த்ரனைப் பார்த்தா வீண் பழிக்கு ஆளாவாங்கன்னு. சந்தனுக்கும் வளர்பிறை தேய்பிறை ந்னு அழகு தேய்ந்தும் கூடியும் மாறி மாறிதான் வரும்னு சொன்னாரில்ல?" என்றார் நாரதர்.
"அழகா சொன்னே நாரதா. நாலாம் பிறையை பார்க்கக்கூடாது. தெரியாம பார்த்துட்டா இந்த ஶ்யமந்தக மணியை நான் திருப்பிக்கொண்டுவந்த கதையை பக்தியோட கேட்டா அந்த சாபத்தினுடைய தாக்கம் போயிடும். இது நான் மனுஷங்களுக்கு குடுக்கற ஸ்பெஷல் வரம். போய்ச் சொல்லிடு. உங்கிட்ட இதையெல்லாம் சொன்னது எனக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. வா அப்புறம் இன்னொரு சமயம் ஜாலியா பேசுவோம்" ந்னு க்ருஷ்ணர் நாரதருக்கு கொஞ்சம் சீடை குடுத்து அனுப்பிட்டார்.
அவ்வளவுதான் கதை. ஜய ஸ்ரீக்ருஷ்ணா.
வாசித்ததற்கு நன்றி
உஷா சங்கரநாராயணன்.

Wednesday, August 31, 2022

வாசகம், திருவாசகம் --- திருச்சதகம்

100 பாடல்கள். அந்தாதி முறையில். மிக ஆழமான அற்புதமான கருத்துகள். மாணிக்கவாசகர் பாடல்கள் பற்றி,  நாம் சொல்ல வேண்டுமா? இருந்தாலும் சொல்கிறோம். நம் த்ருப்திக்காக. சிலவற்றைச் சிந்திக்க எண்ணியது மனம். 

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

வாழ்க்கை நம்மை பல பொறுப்புகளை ஏற்கச்செய்கிறது. அவற்றில் எல்லாம் நாமும் புகுந்து புறப்பட்டு நம்மால் இயன்ற அளவுக்கு நல்ல குணங்களுடன் இருக்க முயன்றுகொண்டிருக்கின்றோம். மகளாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, மகனாக என்று ஏற்ற பாத்திரத்தில் சோபிக்க ஆனமட்டும் முயற்சி செய்கிறோம். அது நாடகத்தில் நடிகர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரம் போலத்தானே?

நம் வாழ்க்கையில் இறைவன் ஒரு சிறு பங்கு. மாணிக்கவாசகருக்கு. வாழ்க்கையே இறைவன் தான். அவர் சொல்கிறார், நான் நடிகன். நாடகத்தால் உன்னுடைய அடியார் போல நடித்தேன் என்று. எழுதி இயக்கும் இயக்குநர் அவர் தானே! ஸ்வாமியின் நாடகத்தில் நடிக்கிறோம் என்பது வேண்டுமானால் சரி என்று சொல்லலாம். உண்மையும் அதுவே. அந்த நாடகத்திற்கு கரு, நம் வினைப்பயன்கள். வினைகளின் வகைக்கு ஏற்ப கதபாத்திரங்களும், காட்சிகளும் அமைப்பவன் அவன். அந்த நாடகத்தால், நீ அமைத்துக்கொடுத்த இந்த வாழ்க்கையில், உனக்கு அடியார் வேடம் ஏற்றிருக்கிறேன் என்கிறாரோ! 

"வேடம் தானப்பா அடியார். ஆனால் நான் உண்மையான அன்பு வைக்கிறேனா? தெரியவில்லையே! என் பிறவிக்கே உரிய பற்றுகளுடன் தான் அலைந்து திரிந்து வருகிறேன். அதை நீயும் நன்கு அறிவாய்" என்கிறார்.

உண்மையில், தூய உணர்வு பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. ஜீவன் (உயிர்) தான் பிறந்து இளைக்கிறது, புல்லாகி, பூடாய் என்றெல்லாமுமாய். அந்த ஜீவன் இந்தப் பிறவியில் பக்தன் வேடம் போட்டிருக்கிறது என்கிறார். 

செய்வதோ வேடம், ஆனால் கேட்பதோ பெரிய பலன் என்கிறார். நாடக நடிகன் என்ன எதிர்பார்க்கலாம்? கைதட்டல்? சம்பளம்? அதற்கும் மேல், இன்னொரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு? இவர் சொல்கிறார், "நான் நடிக்கிறேன். வாஸ்தவம் தான். ஆனால் எனக்கு சம்பளம் என்ன தெரியுமா வேண்டும்? வீடுபேறு. ஆம். பிறவாப்பெருநிலையான முக்தியை நீ தரவேணும்" என்று மிகவும் ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார்.

கடமைக்கு ஏற்ற உரிமை தானே கேட்க வேண்டும். இது சரியா? செய்வது வேடம், கேட்பது பெரிய பலன் இல்லையா? 

"எந்த தைரியத்தில் இப்படிக் கேட்கிறேன்? எனக்குத்தெரியும், நீ தூய பத்தரை மாற்றுத்தங்கம். நான் கேட்க வேண்டும் என்று நினைப்பதை முன்னாலேயே அறிந்து தருவாய். இந்தப் பிறவிப்பிணி தீர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உனது கருணை வேண்டும். எப்போதும் உனது சிந்தனை வேண்டும். குருமுகமாக குருந்த மரத்தடியில் வந்து நீ சொன்ன உபதேச மொழிகள் என் நெஞ்சில் இருக்க வேண்டும். நான் தூய உணர்வு, தூய அறிவு, தூய ஆனந்தம் என்பது என் நெஞ்சை விட்டு நீங்காது இருக்க வேண்டும். அதை அறிவுறுத்திக் கொண்டே நீயே என் நெஞ்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு எனக்கு ஆறு பகைவர்கள் நீங்க வேண்டும். ஐந்து கள்வர்கள் ஓடவேண்டும். என் உள்ளம் எதிர்பார்ப்பில்லாத, தூய அன்பு வடிவமாக இருக்க வேண்டும். இவற்றை நீ எனக்குத் தந்தால், நான் உன்னிடம் கேட்ட வீடுபேறு கிடைக்கும் இல்லையா?" என்கிறார்.

அதற்கு, என்னை உடையவன் நீ என்று வேறு அவருக்கு ஒரு அடைமொழி சொல்கிறார். இங்கு, மார்ஜால நியாயம் பேசுகிறார். மார்ஜாலம் என்றால் பூனை. பூனை தன் குட்டியை ஒரு குறிப்பிட்ட காலம் வரை, வாயில் கவ்விப் பாதுகாக்கும். மர்க்கட நியாயம் என்று ஒன்று உண்டு. மர்கடம் என்றால் குரங்கு. குரங்கின் குட்டி தான் அம்மாக்குரங்கைப் பிடித்துக் கொண்டு சுற்றும்.

பக்தன் முதலில் மர்கடமாக பகவானைப் பிடித்துக் கொள்கிறான். நாளடைவில், பகவான், அவனுடைய கருணையினால் மார்ஜாலமாக, பக்தனை விடாமல் பிடித்துக் கொண்டு முக்திப்பாதையில் விடுகிறார். இது தான் மார்ஜால நியாயம்.

மாணிக்கவாசகராகவே வாழ்ந்து பார்க்க, அவரது பாடல்களுக்கு, அனுக்ஷணமும், புரிதல் கூடிக்கொண்டே போவதை ஏனோ என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பெருங்கடல், திருச்சதகம், சிறுதுளி நாம் இப்போது சிந்தித்தது.

சிந்திப்போம்

வாசகம், திருவாசகம் தொடரும்

Sunday, August 28, 2022

வாசகம், திருவாசகம் 

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

–குழைத்தபத்து, திருவாசகம்


வேண்டுதல் என்பது என்ன? 

மனம் விரும்புவதைக் கேட்பது. மனம் எதை விரும்பும்? தான் அதுவரை பார்த்த கேட்ட விஷயங்களை. அவற்றைத்தாண்டி மனதால் சிந்திக்க முடியாது. புத்தி, அறிவைத்தேடும். அறிய முற்படும். மனதில் இதுவரை எவையெல்லாம் இல்லையோ அவற்றைத் தேடி அறிய முற்படும். அறிந்ததை மனதிடம் தரும். மனம் புதிதாக அறிந்த விஷயங்களை அனுபவிக்க ஆசைப்படும்.

இப்படியா நடக்கிறது ஆசைப் படுதல்?

ஆம். உதாரணம் பார்க்கலாமா? தோசை வேண்டும் என்பது ஆசை. ஆப்ரிக்கக் காட்டில் வாழும் ஒரு ஆதிவாசிக்கு அது ஆசையாக இருக்க முடியுமா? இல்லையே! ஏன்? அவன் அறியமாட்டான் அதைப்பற்றி. அறிவைப் பெற்றபின், அது மனதில் பதியும். அதன் பின் தானே ஆசை உண்டாகும்? இந்தக் கோவில் போனேன். ஸ்வாமியின் அலங்காரம் இப்படி இருந்தது என்று யாராவது போய்விட்டு வந்து சொன்னால், நமக்கும் அந்த க்ஷேத்ரம் போக ஆசை வருகிறது இல்லையா? 

இதில் இன்னொன்று. ஆசைப்படும் பொருள் எப்போதும் அதன் இயல்பிலேயே இருக்கிறது. நம்மை வந்து தூண்டுகிறதா? இல்லை. நம் மனம்தான் தூண்டிக்கொள்கிறது. எதனால்? மனதின் ஸ்வபாவத்தால். ஒரு கட்டிடம் இருக்கிறது. இயல்பின்படி, அது நகராது. நம் முன்னால் வந்து "என்னை வாங்கு" என்று சொல்லாது. அதே போல் தான் நகை, ஆடை அனைத்தும். அவ்வளவு ஏன்? நுரை ததும்ப முதல் டிகாக்ஷன் காபி மேஜை மேல் இருந்து, நம் வாய்க்குத் தானாகவா வருகிறது? பின் மனம் எப்படி அதை அடையும் ஆசையைக் கொள்கிறது?

மனம் வேறு எங்கோ அறிந்திருக்கிறது, அந்த பொருளின் உடைமை கொடுக்கும் பலன்களை. பலன் என்றால், அந்தப்பொருட்களை சொந்தமாக வைத்திருப்பதால் கிடைக்கும் பெருமை, புகழ், செல்வ வளம், அந்தச் செல்வங்களால் பெறக்கூடிய பலன்கள், சந்தோஷங்கள் இவற்றையெல்லாம் அறிந்த மனம், ஆசைப்படுகிறது. சாப்பாட்டு விஷயம் என்றால், சுவையின் இன்பம் அறிந்து ஆசைப்படுகிறது.

அதுவே தன்வரையில் ஆசையாகவும், இறைவனிடத்தில் வேண்டுதலாகவும் ஆகிறது.


நான் எதை வேண்டுவது நல்லது என்பதை அறிந்தவன் நீ என்கிறார் மாணிக்கவாசகர். பூரண சரணாகதியில். இறைவன் தன்னை ஆட்கொண்டபின், தனக்கென்று தனியாக ஒரு செயற்பட்டியல் இல்லை பக்தனுக்கு. இது இறைவன் விஷயத்தில் மட்டுமா? இன்றியய நவீன உலகில், வேலை கொடுத்தவரிடம் கூட இந்த பண்பு வெளிப்படுத்தப்படுகிறது.  அழிந்துபோகும் மனித உறவுகளிடையே இப்படி ஒரு மனோபாவம் இருக்கலாம் என்றல, அழியா பரம்பொருளின் இடத்தில் இருத்தல் நல்லதே.

அப்படி அவன் அறிந்து, அதையே என் புத்தியில் உரைப்பித்து, அதையே நானும் கேட்டதால், வேண்டியதனைத்தும் தருபவனாகவே மாறுகிறான் இறைவன்.

அவனை ஸ்தூலமாக அறிய முற்பட்டால் அரியவன். ஆம். அடி முடி காணப் புறப்பட்ட அயனுக்கும் மாலுக்கும் காணுதற்கு அரியவன். அந்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா என்று அம்பாளைச் சொல்கிறோமே. உள்ளே காண வேண்டியதை வெளியே காண முற்படுதல் அறிவிலித்தனம் இல்லையா? அப்படி நாம் முயன்றால், தன்னைக் காட்டாது இருப்பதால், அரியவர் அவர். அறிதற்கு அரிது. அது பழச்சுவையென, அறிதற்கு அரிதென அமுதென அமரரும் அரியார் என்றாரே!

வேண்டி, நீ யாது அருள் செய்தாய்! என்று வியக்கிறார். யாது அருள்? ஆட்கொண்ட அருள் தான். "யானேயோ தவம் செய்தேன்? சிவாய நமவெனப்பெற்றேன்! தானாய் வந்து தயை செய்து எனை ஆட்கொண்டான்" என்று சொன்னவரும் இவர் தான். தவம் செய்தேன். அருள் செய்தான். அருள் செய்தான் தவம் செய்தேன் என்றார். அவன் அருளால் மட்டுமே அவன் தாள் வணங்க முடியும் என்பதை இதைவிட எப்படிச் சொல்ல? இங்கு வேண்டி என்பது, அவனுக்கு வேண்டு நமக்கு அருள் புரிந்தான் என்பது. அம்மாவுக்குக் குழந்தையின் அருகாமை ஒரு இன்பம் தானே. அதுபோல, எஹன்னை நன்றாக உணர்ந்த பிள்ளையை அருகிருத்த வேண்டி, யாது செய்தார்?

தன்னை அறிவித்தார். பக்தனுக்கு, குருவாக வந்து குருந்தமரத்தடியில் தன்னை அறிவித்து, தானறப்பெறச்செய்தார். சரி. அது என்ன பெரிய விஷயம்? தன்னைப்பற்றிச் சொல்வது? விஷயமே அதுதான். நான் விரும்பியதும் அதுவே தானே. நான் இப்போது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசைப்பட்டு, வெளியில் போக முடியாமல், வீட்டுக்குள் இருக்க, என்னைத் தேடி வரும் விருந்தினர் கையில் அதே பொருள் எனக்கான பரிசாக இருந்தால்? அது தானே நான் வேண்டியிருந்ததை நான் வேண்டாமலேயே, எனக்குத்தருவது? உதாரணம் புரிதலுக்கு மட்டுமே. 

ஜீவன் தன்னை அறிவதன் நோக்கமே பிறப்பு. அதை ஜீவன் விரும்புதலும் உண்மை. அதையே குருவாக வந்து தன்னையும் அறிவித்து, தலைவனையும் அறிவித்து, பின்னர் அத்தலைவன் தானாய், பிறப்புத்தீர்த்தல் என்பதெல்லாம் என்ன வகை அருள்!! வரையறுக்க இயலாத தண்கருணை அல்லவா? அதுவே "யானும் அதுவே வேண்டின்" என்றார்.

"அல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்"..... அட, அப்படி, நீ நான் வேண்ட நினைத்ததைத் தருவது போக, நானும் வேறு ஏதாவது ஒன்றை விரும்பி வேண்டினால்? வேண்டினால் என்ன? வேண்டத்துண்டும் மனம் நிறைந்தவன் நீயேயாதலால், அந்த வேண்டுதலும் நீ என்ன வேண்டுகிறாயோ அதுவே தானே! உள்நிறைந்த ஞானக்கடலே!! உன்னையே சிந்தித்து, ஊறித்திளைத்துக்கொண்டு இருக்கும் எனக்கென்று தனியாக சிந்தையும் செயலும் அறப்பெற்றேனே !!! என்கிறாரே இதுவல்லவோ அனன்ய பக்தி!! அதுதன "ஆதுவும் உன்தன் விருப்பு அன்றே" என்றது.

ஆனன்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் (9.22)

வாசகம், திருவாசகம் தொடரும்....

  உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க. தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு...